ஜனாதிபதியின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளது: நாலக கொடஹேவா
இந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி போட்ட வலையில் தான் விழுந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையும் ஜனாதிபதியின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
சர்வகட்சி மாநாட்டிற்கு சுதந்திர மக்கள் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை கேள்விக்குறியாக இருந்த போதிலும், அதில் செல்வாக்கு செலுத்துவதற்கு பொறுப்பான எதிர்க்கட்சியாக கலந்து கொண்டதாகவும், ஆனால் இந்த மாநாடு முழுக்க முழுக்க ஊடகக் காட்சியாக அமைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பரவலாக்கலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அனைத்துக் கட்சிகளும் முன்வைத்த யோசனையின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநாட்டை திடீரென முடித்துக் கொண்டு வெளியேற நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.