38 ஆண்டு ஆட்சியிலிருந்து பதவி விலகும் கம்போடிய பிரதமர்

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியப் பிரதமர் ஹன் சென் தனது 38 ஆண்டுகால ஆட்சியிலிருந்து பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
மேலும், அந்தப் பொறுப்பை தனது மகன் ஹன் மேனட்டிடம் அளிக்கப்போவதாக அவா் தெரிவித்துள்ளாா். கம்போடியாவின் பிரதமராக கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வரும் ஹன் சென், அந்தப் பதவியை மிக நீண்ட காலம் வகிப்பவா் ஆவாா்.
அந்த நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் அவரது தலைமையிலான சிசிபி கட்சி 125 இடங்களில் 120 இடங்களை வென்றதாக தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
அதையடுத்து, இன்னும் 3 வாரங்களில் பிரதமா் பதவியிலிருந்து விலகப் போவதாக ஹன் சென் அறிவித்தாா். ஞாயிற்றுக்கிழமை தோ்தலில் முதல்முறையாக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ள தனது 45 வயது மகன் ஹன் மேனட்டிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கப்போவதாகவும் அவா் தெரிவித்தாா்.
பிரதமர் பதவி விலகினாலும், கம்போடியா அரசில் அவரது செல்வாக்கு தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை நசுக்கி ஹன் சென் முறைகேடாக நடந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.



