பாதுகாப்பு சூழல் குறித்து ரஷ்ய பிரதிநிதியுடன் வடகொரிய தலைவர் கலந்துரையாடல்!

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவைச் சந்தித்து இராணுவப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்து விவாதித்துள்ளனர்.
1950-53 கொரியப் போரில் போரை நிறுத்திய போர் நிறுத்தத்தின் 70வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய பிரதிநிதி வடகொரியா சென்றுள்ளார். இதன்போது வடகொரிய தலைவரும், ரஷ்யாவின் பிரதிநிதியும், சந்ததித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது "தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு சூழல் ஆகியவற்றில் பரஸ்பர அக்கறை கொண்ட விஷயங்களில்" ஒருமித்த கருத்தை எட்டியதாக வடக்கின் அதிகாரப்பூர்வ கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஷோய்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்ட கடிதத்தை கிம்மிடம் கையளித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது முக்கியமாக விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அத்துடன் வட கொரியாவின் புதிய ஆயுதங்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்திய ஆயுதக் கண்காட்சிக்கு ஷோய்குவை கிம் அழைத்துச் சென்றதாகவும், நாட்டின் இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதற்கான தேசியத் திட்டங்கள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.



