தாமரை கோபுரத்தை இதுவரை ஒரு மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்!
தாமரை கோபுரம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனைமுன்னிட்டு வில்கமுவ பிரதேசத்தில் இருந்து வருகை தந்த குடும்பம் ஒன்றுக்கு டிக்கெட் ஒன்றை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாமரை கோபுரம் செப்டம்பர் 15, 2022 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நாள் முதல் வருவாய் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோபுரத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட வருவாயில், நிர்வாகம் முதல் குத்தகை வாடகையான 100 மில்லியன் ரூபாயை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு செலுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை மொத்தமாக 22,000 வெளிநாட்டினர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர் எனவும், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறினார்.