வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியுமா என்பது சந்தேகமே - ஐ.ம.ச
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறொன்றுமில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியுமா என்பது சந்தேகமே என ஐக்கிய மக்கள் சக்தியின், செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து பதில்களை ஜனாதிபதி கோருவதாகவும், அதற்கான பிரேரணையை அரசாங்கத்தினால் சமர்ப்பித்து பதில்களைப் பெற வேண்டுமெனவும் அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தனது முன்மொழிவுகளை முன்வைத்ததன் பின்னர் எதிர்க்கட்சிகள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.