அபுதாபியில் MERS வைரஸ் தொற்றால் இளைஞன் பாதிப்பு

அபுதாபியில் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS) எனப்படும் வைரஸ் தொற்று வகை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவர் இந்த தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, நோய்த்தொற்றுக்குள்ளான இளைஞருடன் தொடர்பில் இருந்த 108 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று பரவவில்லை எனவும் முதற்கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
ட்ரோமடரி ஒட்டகங்களிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று வைத்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த தொற்றுக்குள்ளான இளைஞன் ட்ரோமடரி ஒட்டகங்களுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதனால் வைரஸ் பரவியமை குறித்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த MERS வகை வைரஸ் ஆனது 2012ம் ஆண்டு முதன்முதலாக சவூதி அரேபியாவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் ஏறத்தாழ 27 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை சுமார் 2605 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 938 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் வழங்கியுள்ளது



