மூவாயிரம் கார்களுடன் தீப்பற்றி எரிந்த சரக்கு கப்பல்

நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் மூவாயிரம் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் இன்று காலை திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன்,கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட மூவாயிரம் கார்களுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மேலும் இந்த கப்பலில் பணியில் ஈடுப்பட்டிருந்த 16 ஊழியர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ பரவலையடுத்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக நெதர்லாந்தின் கடலோர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லியா வெர்ஸ்டீக் தெரிவிக்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய நிலைமையை நாங்கள் கண்காணிக்கிறோம். தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றோம்.
குறித்த சரக்கு கப்பல், ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, டச்சு தீவான அமலாண்டிற்கு வடக்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இந்த பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் கடற்பிரதேசமாகும்.அதேபோல் உலகில் பறவைகள் புலம்பெயர்ந்து செல்லும் முக்கிய கடற்பகுதியும் ஆகும்.எனவே தீப்பரவலை விரைவில் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்.
இந்த சரக்கு கப்பலில் 2,857 கார்களும், 25 மின்சார கார்களும் இருந்தன.அவற்றுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.அந்த கப்பல் பாரிய தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளமையினால் நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவருவது எளிதல்ல“ என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நெதர்லாந்து கடற்படையினரும், சில முக்கிய ஐரோப்பிய நாடுகளும் ஈடுப்பட்டு வருவதாக சர்வதேச செய்தி தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.



