தமிழர்களுக்கு ஆதரவாக கறுப்பு ஜூலைக்கு நினைவேந்தல் செய்த சிங்கள சகோதரர்களுக்கு தடியடி
கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 40 வருடங்கள் கடந்துள்ளன. இக்கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவ்கூரும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இடதுசாரி தலைவர்களும், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோரே இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பொலிஸ், இராணுவத்தினர் இணைந்து இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களை தாக்கியதோடு, தமிழர்களை நினைவுக்கூருவதற்கும் தடைகளை ஏற்படுத்தியிருந்தார்கள். சந்தியா எக்னெலிகொட, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பொலிஸாரால் தள்ளப்பட்டு தரையில் விழுந்துகிடக்கும் படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தன.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 40 வருடங்கள் கடந்துள்ளன. இதன்போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதிக்கோரி விளக்கேற்றி, அமைதியான முறையில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த நாம் முயற்சித்தோம். ஆனால், . எங்களது உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
தனது வீடு எரிக்கப்பட்டதாக புலம்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனக் கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகள், கொலை செய்யப்பட்ட தமிழர்கள் தொடர்பில் ஏன் பேசுவதில்லை? கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு விளக்கேற்றி நினைவுக்கூருவதற்கு முயற்சித்தபோது, அந்த விளக்குகளை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்திருந்தார்கள். இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தோம்.” எனவும் தெரிவித்தார்கள்.