இலங்கைத் தமிழ்த்திரைப்படம் சொப்பன சுந்தரி ஆகஸ்ட் திரையில் வருகிறாள்
இலங்கைத் தமிழ்க்கலைஞர்களால் உருவாக்கப்படும் முழுநீளத்திரைப்படங்களில் இப்போது அண்மையில் வெளிவர உள்ள திரைப்படம் சொப்பன சுந்தரியாகும்.
இந்த ஆரோக்கியமான சூழலில் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நோக்கத்தோடு மாதவன் மஹேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள கொமடி, த்ரில்லர் திரைப்படம்தான் 'சொப்பன சுந்தரி'.
பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே பல குறும்படங்கள் மூலமாக இலங்கை திரைத்துறையினரின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் மாதவன் மகேஸ்வரன்.
வெவ்வேறு விருது விழாக்களில் பல விருதுகளை தனது குறும்படங்கள் மூலம் வென்ற இந்த இளம் இயக்குநர் இயக்கியிருக்கும் முதலாவது முழுநீளத் திரைப்படமே 'சொப்பன சுந்தரி'.
2017ஆம் ஆண்டில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல சவால்களைத் தாண்டி இவ்வருடம் திரைக்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
மாதவனின் ஆஸ்தான கதாசிரியரும் நடிகருமாகிய ஜோயல், 'சொப்பன சுந்தரி' படத்துக்கான கதை, திரைக்கதையை எழுதி, ஒரு பிரதான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
கொழும்பு நகரை கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில், இலங்கையின் புகழ்பூத்த கதாநாயகி நிரஞ்சனி சண்முகராஜா 'சுந்தரி' கதாபாத்திரத்திலும், அவருடன் இணைந்து பேர்ழிஜா, கஜானன், நரேஷ், தனுஷ் செல்வநாதன், வருண் துஷ்யந்தன், ரவி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருப்பதோடு, இயக்குநர் மாதவனும் ஒரு பிரதான பாத்திரமேற்று நடித்திருப்பது ஆவலைத் தூண்டுகிறது.
ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களின் முதலீட்டுக்காக காத்திருந்த 'சொப்பன சுந்தரி', பின்னர் மாதவன், கஜானன் மற்றும் ஜோயலின் சொந்தத் தயாரிப்பில் 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படமாக்கப்பட்டது.
சமல் விக்ரமசிங்கவின் ஒளிப்பதிவிலும், மாதவனின் படத்தொகுப்பிலும் உருவாகிய காட்சிகளுக்கு இசையமைத்திருக்கிறார் ஜீவானந்தன் ராம். ஜீவாவின் மெட்டுகளுக்கு வருண் துஷ்யந்தன், ராகுல் ராஜ் மற்றும் சங்கர் வரிகள் எழுதியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின்னரான தொழில்நுட்பப் பணிகளையும் செய்துகொண்டு, அதே கலைஞர்களின் கூட்டணியில், 2020இல் 'SUNDAY' எனும் இணையத் தொடரையும் Dialog நிறுவனத்தின் VIU செயலிக்காக மாதவன் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் இலங்கை சினிமாத்துறையில் பலரது அன்பை வென்ற கலைஞன் அமரர் தர்ஷன் தர்மராஜ் ஒரு பிரதான பாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இலங்கையில் இன்னும் ஒரு முற்றுமுழுதான தொழிற்துறையாக மாற்றம் பெறாத தமிழ் திரைப்படத்துறையில் ஒரு முழுநீளத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவது என்பது அதுவும் தயாரிப்பாளர்கள் யாருமே இல்லாமல் இம்மாபெரும் இலக்கை ஆறு வருடங்களாக போராடி அடைவது என்பது உண்மையிலேயே ஒரு உன்னதமான சாதனைதான்.
இக்கூற்றை வழிமொழிவதைப்போல அமைந்திருக்கிறது, ஜூலை மாத ஆரம்பத்தில் இணையத்தில் வெளியான 'சொப்பன சுந்தரி' ட்ரெய்லர்.
இது, இளம் வயதினர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன், பலரின் உழைப்பிலும், பெரும் பொருட்செலவிலும் உருவாகியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வரும் சொப்பன சுந்தரி இளைஞர்காளல் நிச்சயம் வரவேற்கப்படும்.