லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைக்குமாறு கோரிக்கை!
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று லாஃப்ஸ் எரிவாயு விலையை உடனடியாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இதனையடுத்து லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும், குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலை அண்மையில் குறைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் சந்தையில் விநியோகம் செய்யப்படுகின்ற இரண்டு எரிவாயுவின் விலைகளையும் சமமாக பேணும் வகையில் விலை சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.