நீதிபதிகளின் சம்பளம் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என முடிவு
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் பேரில், இடைக்கால உத்தரவை நீடிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வரி அறவீடு தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம், இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகியன சமர்ப்பித்த மூன்று மனுக்களை விசாரிப்பதற்கு ஐவர் அடங்கிய அமர்வு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற உள்ளது.