உக்ரைன் ரஷ்ய தலைநகர் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷ்ய தலைநகா் மாஸ்கோவிலும், அதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்திலும் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து மாஸ்கோ மேயா் சொ்கேய் சோபியானின் கூறியதாவது:
மாஸ்கோவிலுள்ள இரு கட்டடங்களில் திங்கள்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்றாா் அவா்.
உக்ரைன் அனுப்பிய அந்த இரு விமானங்களும் லேசா் ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக அவை கட்டடங்களில் விழுந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சக தலைமையகத்துக்கு 2.7 கி.மீ. தொலைவில் அந்த விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ள நிலையில், அந்த தலைமையகத்தைக் குறிவைத்து அவை அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியான கிரீமியாவின் வடக்கே, ராணுவக் கிடங்கில் ஆளில்லா விமானத் தாக்குதல் திங்கள்கிழமை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது.
எனினும், நேட்டோவில் இணைவதில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டியதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே கணிசமான பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளை மீட்பதற்கான எதிா்த் தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் கடந்த மாதம் தொடங்கினாலும், அந்த நடவடிக்கையின் வேகத்தை ரஷ்யா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில் உக்ரைன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ஆளில்லா விமானத்தாக்குதலை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



