எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது - கெஹலிய ரம்புக்வெல்ல!
எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என்பதால், தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், ”பேராதனை வைத்தியசாலையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு காரணமான மருந்து அதே வார்டில் உள்ள மேலும் 12 நோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“குறிப்பிட்ட மருந்தின் சுமார் 167,000 குப்பிகள் இந்த வருடத்திற்குள் பல்வேறு மருத்துவமனைகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்து 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டது. ஒரு மருந்தை தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு எந்த வரையறையும் இல்லை எனத் தெரிவித்தார்.
அத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருந்துகளை கொள்வனவு செய்யாவிட்டால், மருந்து தட்டுப்பாட்டினால் நோயாளிகள் உயிரிழந்திருப்பார்கள். மேலும், 80 வீதமான மருந்துகள், கடன் வழங்கல் காலம் முடிவடைந்த பின்னரும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.