நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
முட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோழிப் பண்ணைகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இந்தப் பண்ணைகளுக்குச் சென்று தரப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கியதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், அதனை சதொச நிறுவனத்தின் ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் கோழித் தீவனங்கள் இல்லாததாலும், கட்டுப்பாடுகள் மற்றும் அதிக செலவுகள் காரணமாக இறக்குமதி செய்ய முடியாததாலும் இலங்கை கோழித் தொழில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.