பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட வரையறைகள் நீக்கம்!
வெளிநாட்டுச் செலாவணி வெளிமுக பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட சில வரையறைகள் தளர்த்தப்பட்டு, புதிய கட்டளைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டும், சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை மேலும் வசதிப்படுத்தும் நோக்குடனும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் நிதி அமைச்சரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து, நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தை பேணும் வகையிலும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி முதல், வெளிமுக பணவனுப்பல் தொடர்பில் சில வரையறைகள் விதிக்கப்பட்டதுடன், சில வகையான பணுவனுப்பல் இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நிதியமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டளைகள், கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு அமுலாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர் ஒருவர் முதல் தடையாக பணம் அனுப்புவதற்கான உயர்ந்தபட்ச வரையறை, 30 ஆயிரம் அமெரிக்க டொலராக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போதைய புதிய தீர்மானத்தின் பிரகாரம் அந்த தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலராக வரையறை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது