பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் 22 திருத்தத்தை மன்றில் சமர்ப்பிக்க திட்டம்!
அரசியலமைப்பில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் 22வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இன்று (24.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் வேளையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பொலிஸ் அதிகாரங்களை பின்னர் அமுல்படுத்துவதற்கும் ஏனைய அனைத்தையும் உடனடியாக அமுல்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இணக்கம் காண ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பின்னணியில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாரிய ஆபத்தில் உள்ளது என்பதை எச்சரிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் நாட்டை இருளில் இருந்து இருளுக்கு அனுப்பியிருப்பதை வரலாற்றை உற்று நோக்கும் எவராலும் இனங்காணமுடியும்.
பொலிஸ் அதிகாரங்கள் அரசியலமைப்பில் உள்ளதால்தான் ஜனாதிபதி அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அழைத்து பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை வழங்குகின்றார்.
அரசியலமைப்பில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் சட்டத்தரணிகள் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதை அடுத்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம். மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படக் கூடாது என ஏழு ஜனாதிபதிகள் எடுத்த நிலைப்பாட்டில், தமிழ்க் கூட்டமைப்பின் வாக்குத் தொகுதிக்காக கூக்குரலிட்டு, தாய்நாட்டை பிரிவினைப்பாதையில் இட்டுச் செல்வதா என்ற தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அவர்களின் முடிவு என்ன என்பதை நாட்டு மக்கள் பார்க்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான தேசப்பற்றை மக்கள் முன்னிலையில் சோதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.