முக்கியஸ்தர்கள் இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்? விசாரிக்குமாறு நீதவான் உத்தரவு
காலி உனவதுன பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு நபர்களிடம் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சாட்சிகளுக்கு அநாவசியமான செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டிற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என சட்டமா அதிபரிடம் விசாரிக்குமாறு காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
இவ்வருட முற்பகுதியில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றின் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய குற்றத்திற்காக உனவடுன பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர், அவரது மகன் மற்றும் மற்றுமொரு நபரை காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இரண்டு ஹோட்டல்களில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உனவடுன சுற்றுலாப் பொலிசார், ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காளர் ஆகியோரை இந்த ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் 752,772 ரூபா, 61,000 அமெரிக்க டொலர்கள், 195,000 ரூபிள் மற்றும் 200 யூரோக்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உனவடுன சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் காலி பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரும் ஹபராதுவ பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த திருடுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ஹோட்டலின் உரிமையாளரை கைது செய்ய வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அழுத்தம் கொடுத்ததாக உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் பிரதான சந்தேக நபர் காலி பிரதான நீதவான் நீதிமன்றில் இவ்வருடம் மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்தார்.
பொலிஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு மாறாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு ஜூலை 19ஆம் திகதி காலி பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பொலிஸ் மா அதிபர் மற்றும் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என சட்டமா அதிபரிடம் விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறும் போது உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை முன்வைப்பது சட்டமா அதிபரின் பொறுப்பாகும் என நீதவான் இங்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளின்படி, விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகின்றது என நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
உனவடுன சுற்றுலா பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அல்லது அவரது உத்தரவின் கீழ் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணையின் இடைநிறுத்தத்தை மேலும் நீடிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.