இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளப் போகும் காலம் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்
தற்போது மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் மாற்றியமைக்காது என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் நிதி ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் விரைவான மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் எதிர்கால நிலையான பொருளாதாரத்திற்கு அவசியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு இறப்பர் வர்த்தகர் சம்மேளனத்தின் 104 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான சட்டம், மத்திய வங்கி சட்டம் மற்றும் வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டம் போன்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் மிகவும் நம்பகமான திசையில் நகர்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கை 1.5 வீதத்திற்கும் 2.5 வீதத்திற்கும் இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜூலை மாத இறுதியில் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் கூட எதிர்பார்க்கும் ஒற்றை இலக்க பணவீக்க விகிதத்தை நாட்டின் பொருளாதாரம் அடைய முடியும் என்று அவர் கூறினார்.