அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாட்டில் நெற் செய்கையை சிறப்பாக முன்கொண்டு செல்வதற்கான ஏற்பாடாக புதிய கமக்காரர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் நலன்களை கவனத்தில் கொண்டு சுமார் 200 ஏக்கர் விஸ்தீரணமுள்ள அக்கரையான் கரும்பு தோட்ட நெல் பிரதேசத்தை அவ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான திட்டத்தின்கீழ் புதிய கமக்காரர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
4 வருடங்கள் முன்னதாக வறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென கௌரவ அமைச்சர் அவர்கள் அக்கரையான் அபிவிருத்தி பேரவை அமைப்பை உருவாக்கி இந்த நிலங்களை பகிர்ந்தளித்திருந்த நிலையில் எதிர் பார்த்த பலன்களை இந்த விவசாயிகள் அடைந்து கொள்வதில் பல சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
இந்த நிலமையை கவனத்திலெடுத்து இந்த நெற் செய்கை பயனாளிகளிகளுக் கென தனியான கமக்காரர் அமைப்பை உருவாக்கி அதனை சட்ட பூர்வமாக பதிவை மேற்கொள்ளும் பணிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்திருந்தன.
அதற்கிணங்க இந்த விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் கௌரவ அமைச்சர் அவர்களின் ஏற்பாட்டில் இன்றிலிருந்து (22) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் கலந்துகொண்டு அடுத்த காலபோகத்துக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தார்.
இதில் குறித்த கமக்காரர் அமைப்புக்காக புதிய வங்கி கணக்கினை திறத்தல், இச் செய்கையாளர்களுக்கென தனியான உழவு இயந்திரமொன்றை விவசாய அமைச்சிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள், கால்நடைகளை கட்டுப்படுத்த வென சுற்றுவேலி அமைத்தல், அங்குள்ள அரவை இயந்திரங்களை நிறுவி ஆலையை இயங்க செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதிப்புக்குள்ளான சிறுதானிய செய்கையாளர்களுக்கு விதைநெல்லை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.
விவசாயிகளின் நலன்களை கவனத்தில் கொண்டு புதிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் தமது கூட்டான காத்திரமான பங்களிப்பை வழங்கி உதவ வேண்டும் என இணைப்பாளர் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில் கரைச்சி அமைப்பாளர் தோழர் நேசன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.