மேலும் இரு அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை!
மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (21.07) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கிளிநொச்சி மருதநகர் பகுதியை சேர்ந்த 69 வயதான செல்லையா நவரத்னம் மற்றும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 56 வயதுடைய சண்முகரத்தினம் சண்முகராசா ஆகியோரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்லையா நவரத்தினத்திற்கு 200 வருட சிறைத்தண்டனையும், சண்முகரத்தினம் சண்முகராசாவிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலையான அரசியல் கைதிகளை தமிழ் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துள்ளதோடு, அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களின் வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்கமைய நீண்ட நாட்களாக சிறைத் தண்டணை அனுபவித்து வருபவர்கள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.