அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் : நிதி பற்றிய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவு?
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாகவும், அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை அறிக்கையொன்றின் மூலம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்னநாயக்க உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய, நிதியமைச்சுடன் பேச்சுவார்தை நடத்தி, அதனை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் எனவும், அதற்காகவே தேர்தல் செலவு குறித்த அறிக்கையை ஜனாதிபதி முற்கூட்டியே தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் தொகையை மதிப்பீடு செய்து அதனை கூடிய விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.