சுகாதார திணைக்களம் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை!
நாட்டின் சுகாதாரத்துறை நலிவடைந்து வருகின்ற நிலையில், சுகாதார திணைக்கள அதிகாரிகள் அத்திணைக்களத்தின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல் வழங்க தடை விதிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சுற்றறிக்கை தொடர்பில், கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது வைத்தியர்களின் கூட்டு அதிகார சபையின் தலைவர் ரவி குமுதேஷ் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், திணைக்கள தலைவரின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர்பான விதிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான சுற்றிக்கைகள், தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் வெளியிடப்பட்டதாகத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, இது குறித்து அவசர விளக்கம் அளிக்கவும், அதுவரை குறித்த சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறும் சுகாதாரத்துறை செயலாளரிடம், நிரப்பு மருத்துவ வல்லுநர்களின் கூட்டு அதிகார சபை கேட்டுக்கொள்வதாகவும் ரவி குமுதேஷ் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.