பொலிஸ் வேடமணிந்து சொத்துக்களை கொள்ளையடித்த 10 பேர் கைது
பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து பணம் மற்றும் சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல மற்றும் பண்டாரகம ஆகிய இடங்களில் சந்தேகநபர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி ஹொரண பொக்குனுவிட பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபரை ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய 09 சந்தேக நபர்களில் ஒருவரிடம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவலின் பிரகாரம், திருடப்பட்ட 02 முச்சக்கர வண்டிகள், 06 மோட்டார் சைக்கிள்கள், 03 தங்க பந்துகள், 02 வாள்கள், ஒரு மன்னா கத்தி மற்றும் 'பொலிஸ்' என குறிப்பிடப்பட்ட பல சட்டைகள் மற்றும் ஜாக்கெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.