வடகொரியா இன்று பல்வேறு ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா அறிவிப்பு

வடகொரியா விண்ணில் தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், வடகொரியா இன்று மஞ்சள் கடல் பகுதியில் பல்வேறு ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது. இதனை தென்கொரியா அறிவித்து உள்ளது.
இதுபற்றி தென்கொரியாவின் படைகளுக்கான தலைவர் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய ராணுவம் கண்காணிப்பு மற்றும் காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும், உறுதியான தயார்நிலையையும் பேணி வருவதாகவும் என கூறியுள்ளார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வட கொரியாவின் ராக்கெட் சோதனைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரிசோதனை அதிகாலை 4 மணியளவில் நடந்து உள்ளது.
இந்த ராக்கெட்டுகள் தொடர்பான வகை மற்றும் பிற குறிப்பிட்ட தகவல்களை கண்டறிய தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இரண்டு குறுகிய தொலைவு சென்று தாக்க கூடிய ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்த 3 நாட்களில் இந்த பரிசோதனை நடந்து உள்ளது



