கிளிநொச்சியில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் பயிற்சிப் பட்டறை!
பால் நிலைச் சமத்துவம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான இரு நாட்களை முழுநேரமாக் கொண்ட பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலையத்தில் Healthy Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Healthy Lanka நிறுவனத்தினால் தேசிய ரீதியில் நிறுவனங்களை இணைப்புச் செய்து தொடர்ச்சியாக இரண்டு வருட காலத்திற்கு கிராமிய மட்ட மற்றும் சிவில் சமூக, அரச சார்பற்ற நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
மேலும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான வேலைத்திட்டங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாகவும் குறித்த செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நேற்று(20) காலை 9.00மணிக்கு ஆரம்பமான முதல்நாள் செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
தொடர்ந்து இன்றைய தினம்(21) காலை 9.00மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் : கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பரியது. பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தித்திட்டங்களுக்கு மேலாக, சமூகம் சார்ந்த பல விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் இன்றைய இச் செயலமர்வு முக்கியமானதும் அவசியமானதுமாகும்.
ஏனெனில் அவசியமான தேவையான பணத்தை தேவையற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் குடும்ப ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகிய நீங்கள் இத்துறை சார்ந்து மாற்றங்களை கொண்டு வரவேண்டும். இங்கு நீங்கள் பெற்றுக் கொண்ட அறிவினை கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இச்செயற்பாடுகளுக்கு எமது கிராம மட்ட உத்தியோகத்தர்களும் தங்களது பங்களிப்பினை வழங்குவார்கள்.
மேலும் தற்போது கிராமிய புத்தெழுச்சி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஊடாகவே இச்செயலமர்வின் உண்மையான நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும். எனவே, நீங்கள் இங்கு இரண்டு நாட்கள் பெற்றுக்கொண்ட அறிவினை உங்களோடு மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளாது, துறைசார்ந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கிராம புறங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, கிராமங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு சமூகத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. அத்தோடு சமூக மட்டங்களில் உள்ள அமைப்புக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை இதற்காக மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதனைவிட ஆண், பெண் சமத்துவ முறைகளை கையாளும் அணுகு முறைகள் தொடர்பிலான விளக்கங்களும் இதன் போது உள்வாங்கப்பட்டன. இதன் வளவாளர்களாக அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரும், Healthy Lanka நிறுவனத்தின் தலைவரும், அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னாள் பணிப்பாளருமான சாக்ய நாணாயக்கார மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் சீலன், Healthy Lanka நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் தே. பிறேம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






