கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம்: எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட விவசாய குழுவின் தலைவருமான திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய தினம்(20) வியாழக்கிழமை பி.ப 2.00மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் மாவட்ட விவசாய பிரிவின் செயற்றிட்டங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகள், மாகாண விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கால்நடை பராமரிப்பு பற்றிய செயற்பாடுகள், நெல்சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாடுகள், தெங்கு அபிவிருத்தி சபையின் திட்ட செயற்பாடுகள், மேய்ச்சல் நில பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்புச் செலுத்தும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும், ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், நீர்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








