இலங்கையில் நான்கு மில்லியன் மக்கள் வறுமையில்! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தலைமையில் LIRNEasia நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆராச்சிகளில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த கணக்கெடுப்பின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களில் 81 வீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
2019 முதல், கிராமப்புற வறுமை 15 வீதத்தில் இருந்து 32 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புற வறுமை ஆறு வீதத்தில் இருந்து 18 வீதமாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பெருந்தோட்ட சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுவதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
அவர்களின் கணக்கெடுப்பு அறிக்கை, ஏழை 10 குடும்பங்களில் 31 வீதம் மட்டுமே செழிப்பாக இருப்பதாகவும், பணக்கார 10 குடும்பங்களில் நான்கு வீதம் மட்டுமே செழிப்புடன் இருப்பதாகவும் வெளிப்படுத்துகிறது.
தற்போதுள்ள சமூக உதவித் திட்டங்கள் சமூகத்தில் உள்ள ஏழை மக்களைச் சென்றடையவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து LIRNEasia இன் கயானி ஹுருல்லே கருத்து வெளியிடுகையில், “இவ்வளவு குறுகிய காலத்தில் மேலும் நான்கு மில்லியன் இலங்கையர்கள் வறுமையில் வீழ்ந்துள்ளமை வருத்தமளிக்கிறது.
குடும்பங்கள் ஒரு குழந்தையின் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாங்கள் சந்தித்த பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சரிவிகித உணவை வழங்க முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இந்த சவாலான காலங்களில் சமூக பாதுகாப்பு வலைகளில் போதுமான அளவு செலவு செய்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க முடியும். சமூக பாதுகாப்பு வலைகளுக்கு போதுமான ஏற்பாடுகளை ஒதுக்குவது மட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட நிதியை திறமையாகப் பயன்படுத்துவதும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதிநிதிகளான 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மாதிரியைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.