தீயிட்டு எரிக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்!
தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் மோட்டார் சைக்கிள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
தியத்தலாவை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி நேற்று (18) இரவு தனது மோட்டார் சைக்கிளில் தியத்தலாவ நகர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு குடிபோதையில் முச்சக்கரவண்டி ஓட்டுநரை கைது செய்த பின்னர், இந்த அதிகாரி தனது மோட்டார் சைக்கிளை தியத்தலாவ நகரில் விட்டுவிட்டு குடிபோதையில் சாரதி ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
முச்சக்கரவண்டியை பொலிஸ் நிலையத்தில் விட்டுச் சென்ற இந்த அதிகாரி, மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காக தியத்தலாவ நகருக்குச் சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் காணப்படவில்லை.
பின்னர், குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கல்கந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மேலதிக விசாரணையில் தீப்பிடித்த மோட்டார் சைக்கிள் தியத்தலாவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு நிலைய கட்டளைத் தளபதிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.