ஊழல் தடுப்பு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!
ஊழல் தடுப்பு சட்டமூலம் இன்று (19.07) நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
எவ்வாறாயினும், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) உட்பட பல தரப்பினர் சட்டமூலத்தின் உட்பிரிவுகளுக்குள் உள்ள முக்கிய கவலைகளை முன்னிலைப்படுத்தியதால், இந்தச் சட்டமூலம் பல சர்ச்சைகளில் சிக்கியது.
குறிப்பாக கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை பாதிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கிடையில், ஊழல் தடுப்பு மசோதாவில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் (WPC) சமர்ப்பித்தது.
இதனையடுத்து மசோதாவின் சில சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், எனவே திருத்தங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.