இலங்கையின் கடவுச்சீட்டு தொடர்பில் சர்வதேசத்தில் வெளியான தகவல்!
இலங்கையின் கடவுச்சீட்டு சர்வதேசரீதியில் 95 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 95 ஆவது இடத்தை பெற்றுள்ளது என அண்ட் பார்ட்னர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. இலங்கை கடவுச்சீட்டை வைத்திருக்கும் 41 நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் அல்லது ஒன்-அரைவல் விசாவைவழங்கியுள்ள நிலையில், இலங்கை தரவரிசையில் முன்னேறியுள்ளது. சிங்கப்பூர், மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு இலங்கை இந்த வசதியை வழங்கியுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு 2022 இல் 103 வது இடத்திலும் 2021 இல் 107 வது இடத்திலும் இருந்த நிலையில் தற்போது 95 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையில், 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் இந்திய கடவுசீட்டு ஐந்து இடங்கள் முன்னேறி 80 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் அண்டை நாடுகளான மாலைதீவுகள் தரவரிசையில் 57வது இடத்திலும், பூட்டான் 84வது இடத்திலும், பங்களாதேஷ் 96வது இடத்திலும், நேபாளம் 98வது இடத்திலும், பாகிஸ்தான் 100வது இடத்திலும் உள்ளன.
ஐந்தாண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த ஜப்பான், முதல் முறையாக 3 ஆவதாக தரமிறங்கியுள்ள நிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் இறுதி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.