இலங்கையை ஒரே சிங்களமயமாக அறிவிக்கலாமே? சபையில் சீறீய சிறீதரன்
இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் நீதிபதிகள் தமிழ் சட்டத்தரணிகள் தமிழ் சட்டமா அதிபர்கள் இவர்களை நீங்கள் நீக்கிவிடுங்கள். அவர்களை நீக்கிவிட்டு ஒரே சிங்களமயமாக நீங்கள் அறிவிக்கலாமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வினவியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றுவரும் நிதி அமைச்சின் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பிலான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கடந்த வாரம் முல்லைத்தீவு - திருகோணமலை மாவட்டங்களுக்கு இடைப்பகுதியில் இருக்கின்ற குருந்தூர் மலை விகாரையில் சிங்கள பௌத்த பிக்குமார்களும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் சென்று ஒரு இனவாத ரீதியிலான செயற்பாட்டை அங்கு மிக பிரம்மாண்டமாக செய்து தங்களின் இனவாத கருத்துக்களை கக்கியிருக்கிறார்கள்.
அதேநேரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நேரில் சென்று குருந்தூர் மலையை பார்வையிட்டார். அங்கு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த விகாரையையே அவர் பார்வையிட்டிருந்தார்.
நீதிபதி சரவணராஜாவின் தீர்ப்பு குறித்து சபையில் கருத்து வெளியிட்டிருந்த சரத் வீரசேகர, நீதிபதி சரவணராஜ ஒரு தமிழ் நீதிபதியாக அங்கு தமது செயல்பாட்டை செய்ய முடியாதென கூறியிருந்தார். அப்படியாயின் தமிழ் சட்டத்தரணிகள், தமிழ் நீதிபதிகளை நீக்கிவிடுங்கள். அனைத்தையும் சிங்கள மயமாக அறிவித்துவிடலாமே.
இவ்வாறு மோசமான கருத்துகளை வெளியிடுகிறார்கள் என்றால், நாடு எங்கே போகிறது என்றே கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் நீதிபதி தீர்வு வழங்க முடியாதென அவர் கூறியுள்ளார். அப்படியாயின் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தை மூடிவிடுங்கள்.
குருந்தூர்மலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் ஆதிசிவனின் சிலை அங்கு கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது. அப்போது இருந்த சிவலிங்கம் இப்போது எங்கு போனது?.
1905ஆம் ஆண்டு எச்.பி.பெல் லூயிஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தாம் மேற்கொண்ட ஆய்வில், குருந்தூர்மலையில் சதுர ஆவுடையார் என்ற சிவலிங்கமும், நந்தியும் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அங்கு ஒரு சைவ சிவாலயம் இருந்ததாகவும் நிரூபித்துள்ளனர்.
இவ்வளவும் நடந்தும் இங்கு சைவ ஆயலம் இல்லையென்றும் நீதிமன்றத்தையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ள சரத் வீரசேகரவின் செயல்பாடு சரிதான?'' - என்றும் சிறிதரன் எம்.பி. சபையில் கேள்வியெழுப்பினார்.