இலங்கையில் எதிர்வரும் மாதங்கள் மிக முக்கியமானவை: ஆதரவு வழங்க தயார்! உலகவங்கி
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் முக்கியமானவை என உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.
மார்ட்டின் ரைசருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமான தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்காக கடன் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் அதற்கு ஆதரவளிப்பதற்கு உலக வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட தரப்பினர் தனியார் துறையினருடனும் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் கொள்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.