தபால் சேவைகளை வழங்க முச்சக்கரவண்டிகளை களமிறக்க தீர்மானம்!
தபால் சேவையின் நவீனமயப்படுத்தலின் கீழ் நாடு பூராகவும் 1,000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்கும் இறுதி இலக்குடன் தபால்காரர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தபால் சேவையை நவீனமயமாக்கும் பணியை அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தபால் துறையை எந்த வகையிலும் தனியார் மயமாக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தபால் திணைக்களத்திற்கு 4000 மில்லியன் ரூபாவால் நட்டம் குறைக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.