இலவச சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனக் கோரிக்கை!
மருந்துகளின் தரம் சம்பந்தமான அண்மைய அசம்பாவிதங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலவச சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டாம் என இலங்கை மருத்துவ சங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது நிலவும் சுகாதார நெருக்கடிகள் குறித்து நேற்று (17.07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வைத்தியர் வின்யா ஆரியரத்ன மேற்படி கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களை ஒப்புக்கொண்டார்,
ஆனாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முழு அமைப்பையும் மதிப்பிடுவது நியாயமற்றது என்றும், வலியுறுத்தினார்.
எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன், அந்த சம்பவங்கள் தரம் குறைந்த மருந்துகளுடன் தொடர்புடையதா என்பதைத் தீர்மானிக்க, முறையான விசாரணைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
எனவே, அரசாங்க வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் மருத்துவ உதவியை நாடுமாறும் வைத்தியர் ஆரியரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
"இந்த முயற்சியில், பொதுமக்களுக்கு மிக உயர்ந்த தரமான மருந்துகள் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதில் அரசு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய பங்கு வகிக்கின்றன," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.