பொலிஸாரின் உத்தரவை மீறி செயற்பட்ட இளைஞர்கள் குழு கைது!
கடுவெல, வெலிவிட்ட பிரதேசத்தில் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடுவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இன்று (17.07)மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வீதியில் பயணிக்கும் மக்களை துன்புறுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இளைஞர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். இருப்பினும் பொலிஸாரின் உத்தரவை மீறி இளைஞர்கள் மோட்டார் வண்டியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இளைஞர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் 16 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களை நாளைய (18.07) தினம் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.