மயக்கமருந்து கொடுக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி உயிரிழப்பு!
வைத்தியசாலைகளில் பதிவாகும் சர்ச்சைக்குரிய மரணங்கள் தொடர்பில், பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க முறையான அமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (07.16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அநுராதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளி கடந்த 06.28 ஆம் திகதி உயிரிழந்தது குறித்து கவலை வெளியிட்டார்.
குறித்த நோயாளி அக்குள் கட்டியை அகற்றுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து கொடுத்தப்பின் மீண்டும் அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளியின் மரணம் தொடர்பில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளபோதிலும், இது குறித்து யாரும் முறைப்பாடு அளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க முறையான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.