13ஆம் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விடயம் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பில் கைச்சாத்திட்ட இந்தியா, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தொடர்பில் அன்று முதல் இன்று வரை ஏதோ ஒரு நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
அமெரிக்காவாயினும் ஐரோப்பிய ஒன்றியமாயினும் ஐக்கிய நாடுகள் சபையாயினும் சரி இந்தியாவை மீறி எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.
இந்நிலையில், இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினையை கையாள்வதன் மூலம் இலங்கை அரசை கையாள முடியும் என்பது உண்மை.
ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்கும் சீனா ஏனைய நாடுகளின் விடயத்தில் வாய் திறப்பதில்லை.
எனவே, 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியாவுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இவ்விடயத்தை எங்களுடைய கட்சியினர் எந்தளவுக்கு மேற்கொள்கின்றோம் என மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.