ரஷ்யா கொத்துக்குண்டுகளை பயன்படுத்த தயங்காது என எச்சரிக்கை!

உக்ரைனுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கு தமது படைகள் தயங்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஓர் ஆண்டை கடந்து நடைபெற்று வருகின்ற நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா கொத்துக்குண்டுகளை வழங்கியுள்ளது.
இதற்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா ஜனாதிபதி பைடனும் இந்த முடிவை எடுப்பதற்கு கடினமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அமெரிக்காவின் இந்த முடிவை வேறு ஒரு கோணத்தில் பார்க்குமாறும், நியாயமாக கருதுமாறும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், ரஷ்யாவிடம் போதுமான அளவு கொத்துக் குண்டுகள் கையிருப்பில் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்த அந்நாட்டு ராணுவத்திற்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யப் படைகளும் கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



