தடுப்பூசி போடப்பட்டதால் பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்தாரா? விசாரணை அறிக்கை நாளை சுகாதார அமைச்சரிடம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் கடந்த 11ஆம் திகதி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை நாளை தம்மிடம் கையளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 05 விசேட வைத்தியர்கள் கொண்ட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் உறுப்பினர்கள் நேற்று பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வயிற்றுக் கோளாறு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் இருந்து இரண்டு ஊசி மருந்துகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக நாட்டில் பெரும் விவாதங்கள் எழுந்ததுடன், பல தரப்பினரும் வழங்கப்பட்ட தடுப்பூசி குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் விசேட குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.