நாடு திவாலானது குறித்து கண்டறிய எதிர்கட்சி சார்பில் குழு நியமனம்!
நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கான காரணங்களைக் கண்டறிய அரசாங்கம் நியமித்த குழுவிற்குப் பதிலாக மாற்றுக் குழுவொன்றை நியமிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் வங்குரோத்து நிலையை ஆராய்வதற்காக அரசாங்கம் அண்மையில் நியமித்த குழு குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான தந்திரமான உத்தி.
அரசாங்கம் முன்மொழிந்த தெரிவுக்குழுவின் அமைப்பை ஆராய்ந்து நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது அதிகாரத்தில் இருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்தை நியமித்ததும் அரசாங்கத்தின் அப்பட்டமான நிலை வெளிப்படுகிறது.
எனவே, இதுபோன்ற தேர்வுக் குழுவில் பணியாற்றுவது நேரத்தை வீணடிக்கும் வீண் செயல் என்பதால், அந்த தேர்வுக் குழுவில் இருந்து விலக ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
மேலும், எதிர்கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்தின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பங்களிப்புடன் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் செயற்பாட்டிற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனது நேர்மையுடன் பங்களிக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.