Ceftriaxone மருந்து பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!
பேராதனை வைத்தியசாலையில் 21 வயது இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், ”, பேராதனை வைத்தியசாலையில் Ceftriaxone மருந்தினால் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பில் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த மருந்தை பயன்படுத்தியபோது ஒவ்வாமை எதுவும் பதிவாகாததால் அந்த மருந்தை அகற்ற வேண்டாம் என அப்போது முடிவு செய்திருந்தோம். இலங்கையில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு குறித்த மருந்து 10 தொகுதிகளுக்குமேல் விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்போது கூட அந்த மருத்துவமனைகளில் அதே மருந்து பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், அமைச்சர், மருந்துப் பொறுப்பு கூடுதல் செயலாளர், மருத்துவ வழங்கல் பிரிவு இயக்குநர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தரமான ஆய்வகத்திற்கு மருந்து அனுப்பப்படும் வரை, அந்த மருந்துப் பொருட்களின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வகைகளை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.