நாம் இன ரீதியாக பிளவுபட்டால் உயர்ந்த நாடாக வளரமுடியாது: யாழில் மனுஷ நாணயக்கார
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளதுடன் இந்த தொழிற்பயிற்சி நிலையம், வடமாகாணத்திற்கான நிலையமாக அமைக்கப்படவுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கான காணியை பெற்றுத்தருமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடினேன்.
இதன் மூலம் ஆட்கடத்தலை தடுக்கவும், பல்வேறு கடத்தல்களில் சிக்குபவர்களை தடுக்கவும், தொழில்வாய்ப்புகளுக்கு பயிற்சி பெறாதவர்களுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லவும், வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்கு தேவையான விழிப்புணர்வு வசதிகளை ஏற்படுத்தவும் நாம் செயற்பட்டு வருகிறோம்.
கொழும்புக்கு வந்து எமது அமைச்சின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும், நீங்கள் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றோம் என தெரிவித்தார்.
இதேவேளை யாழில் மாணவர்களுடன் நீண்ட நேரம் சிநேகபூர்வமாக உரையாடிய அமைச்சர் அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களை முன்னர் சந்தித்தித்திருந்தேன்.
வடக்கிலிருந்து ஒரு அமைச்சரவை அமைச்சரைப் பார்த்த பின்னர் தெற்கிலிருந்து ஒரு அமைச்சரவை அமைச்சரைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். இவர்களுடன் பேசியதிலிருந்து அவர்களின் சகோதரத்துவத்தை உணர முடிந்தது.
அந்த இளைஞர்களுடன் பேசி அவர்களின் பாசத்தை உணர்ந்த பின்னர், எனது வாக்காளர்கள் இருக்கும் காலியில் பயிற்சி நிலையத்தை அமைக்காமல், உண்மையான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு அந்த பயிற்சி நிலையத்தை கொண்டு வர முடிவு செய்தேன்.
குறைந்த பட்சம் 2048க்குள் நாம் வளர்ந்த நாடாக உயர வேண்டும்.
எந்த காரணத்திற்காகவும் நாம் பிளவுபட்டால், அந்த பணியை நம்மால் அடைய முடியாது எனவும் தெரிவித்தார்.