வெளிநாட்டில் இருந்து விமானிகளை பெற்றுக்கொள்வோம் - நிமல் சிறிபாலடி சில்வா!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து விமானிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில், வெளிநாட்டு விமானிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் (CAASL) ஏற்பாடு செய்யப்பட்ட 'வானத்தை மீளக் கட்டியெழுப்புதல் - வளர்ச்சிக்கான இலங்கை விமானப் பயணத்தை நிலைநிறுத்துதல்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
"இது உலகில் எல்லா இடங்களிலும் பொதுவானது. அவர்கள் வேறு இடங்களில் அதிக ஊதியம் பெறலாம். ஆனால் அவர்களுக்கான அத்தியாவசிய வாழ்க்கை செலவுகள் அதிகமாக இருக்கும். இலங்கையில், வாழ்வது போல் அங்கு வசதியாக வாழ முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள ஒரு மருத்துவருக்கு மாதம் 5,000 பவுண்டுகள் கிடைக்கும் அதேசமயம், இலங்கையில் அவர்களுக்கு 150,000 மட்டுமே கிடைக்கும், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்பவர்கள் 150,000 ரூபாவை சம்பாதிப்பார்கள், அதேசமயம் இங்கு 75,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் 216 விமானிகள் கைவசம் உள்ளதாகவும், அனைத்து விமானிகளும் வெளியேறினால், நாங்கள் வெளிநாட்டு விமானிகளை இயக்க வைப்போம், ”என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.