சீனாவின் இரட்டை ராக்கெட் திட்டம்

2030 வருடத்திற்குள் சந்திரனுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இதில் ஒன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் (Lander) வாகனத்தை சுமந்து செல்லும். மற்றொன்று விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை ஏந்திச் செல்லும். விண்வெளி வீரர்களையும், லேண்டரையும் ஒன்றாக அனுப்பும் அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டை உருவாக்குவதில் சீனாவிற்கு நீண்டகாலமாக தொழில்நுட்ப தடை இருந்து வந்தது.
இந்த இரட்டை ராக்கெட் திட்டம் மூலம் அது தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ராக்கெட்டுகளும் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் விண்கலங்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், விண்வெளி வீரர்கள் லேண்டரில் பயணித்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவார்கள்.
பின்பு சந்திரனில் தங்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு, மாதிரிகளை சேகரித்த பிறகு, சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்திற்கு விண்வெளி வீரர்கள் லேண்டர் மூலம் திரும்புவார்கள்.
அதில் பயணித்து அவர்கள் பூமிக்கு வருவார்கள். சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் போட்டி சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் சந்திரனில் உள்ளதாக கருதப்படும் கனிம வளங்களை குறி வைக்கின்றன.
சந்திரனில் மனிதர்களுக்கான வாழ்விடங்களை நிறுவுவதன் மூலம், செவ்வாய் போன்ற பிற கிரகங்களுக்கு எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.



