அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா

அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென்கொரியா-அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இதையடுத்து அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.
நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமெரிக்க உளவு நடவடிக்கைகளுக்கு வடகொரியா நேரடியாக பதிலளிக்காது.
ஆனால் அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லை கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்றார்.



