ஈஸ்டர் வழக்கு: இழப்பீட்டில் 15 மில்லியன் ரூபாவை செலுத்திய மைத்திரிபால
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய அந்த இழப்பீட்டில் 15 மில்லியன் ரூபாவை அவர் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500 ரூபா ஓய்வூதியமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொடுப்பனவுகள் நீங்கலாக 54,285 ரூபாவும் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில், கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நிதிக்காக 15 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எஞ்சிய நட்டஈட்டை வருடாந்தம் தலா 85 இலட்சம் ரூபா வீதம் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையின் ஊடாக கோரியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான தீர்ப்பை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்றக் குழு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி அறிவித்திருந்தது.
அந்த தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 15 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவினால் ஒரு மில்லியன் ரூபா. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பதினேழு இலட்சத்து 25 ஆயிரத்து 588 ரூபா. முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 05 மில்லியன் ரூபாவை நட்டஈடாக செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இழப்பீடுகள் அனைத்தும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன இதுவரை நட்டஈடு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.