ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது வடகிழக்கு பகுதிகள் குறித்து கவனம் செலுத்தப்படும் - அலிசப்ரி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது எரிசக்தி, மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்டம் குறித்து ஆராயப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்தும் பெரும்பாலம் இலங்கையின் வடபகுதி குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.
குறிப்பாக "திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை துறைமுகம் பற்றி பேசிய அவர், திருகோணமலை துறைமுகத்தை பெரிய துறைமுகமாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்ய இரு நாடுகளும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் துறைமுகப் பகுதிகளில் ஆதிகம் செலுத்த இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் நீண்டகாலம் போட்டியிட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், சீனாவின் இரண்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து, திவால் நிலையில் இருந்து வெளியே வரும் எனவும் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.