தைவான் எல்லையில் சீனா போர் விமானம், கப்பல் என படைக்குவிப்பு
தைவான் எல்லை அருகே 13 போர் விமானங்கள் மற்றும் 6 போர் கப்பல்கள் என சீனா நிறுத்தி வைத்துள்ளது. 1949ம் ஆண்டு சீனா உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல தீவுகளைக் கொண்ட தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது.
இதை ஏற்க மறுத்து தைவான் மீது சொந்தம் கொண்டாடும் சீனா அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது. ஆனால் தைவானுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, அதற்கு தேவையான ஆயுத உதவிகளையும், போர்ப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
அமெரிக்காவின் செயலால் சீனா ஆத்திரமடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லன் ஜூலை 6 முதல் 9 வரை சீனாவுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார்.
இந்தநிலையில் தைவானின் வான் மற்றும் கடல் எல்லைகளில் சீனா 13 போர் விமானங்களையும், 6 கப்பல்களையும் கடந்த 24 மணி நேரத்தில் அனுப்பி வைத்துள்ளது.
இதனை அவதானித்த தைவான் சீனாவிற்கு பதிலடி கொடுக்க தாம் தயாராக உள்ளனர் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.