பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்திருக்காவிட்டால் ரணிலின் மதிப்பு தெரியாமல்போயிருக்கும்!
கோட்டாபய நியமிக்கப்படாமல் இருந்திருந்தால், சந்திரிக்கா பண்டாரநாயக்காவும், மஹிந்த ராஜபக்ஷவும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இல்லாதிருந்தால், இந்த நாடு பொருளாதார அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்காமல் இருந்திருந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மதிப்பு தெரியாமல் இருந்திருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், "அன்று ரணில் விக்கிரமசிங்கவை திட்டி, குற்றம் சாட்டிய மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று கூறுகிறார்கள்.
வரி விதிக்கப்படும் போது வரி குறைக்க வாக்களிக்கப்பட்டது. உர மானியம் நீக்கப்படும் போது உர மானியம் வழங்கப்படும் என வாக்களிக்கப்பட்டது. இதுபோன்ற வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் அரசியலால் மக்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.
ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவால் தான் சரியான பாதையில் செல்ல முடியும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். 2048 பற்றி ஜனாதிபதி பேசும்போது சிலர் சிரிக்கிறார்கள். இந்த சிறு குழந்தைகளுக்கு வளர்ந்த நாட்டில் வாழ வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார்.
நாங்கள் செய்த அர்ப்பணிப்புகள் மிகப்பெரியவை. ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அர்ப்பணிப்புகள் பாரியவை. அந்த கட்சி நாளை இந்த நாட்டை மீட்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.