சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடுபவர்களுக்கு எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களில் காணொலிகள் மற்றும் புகைப்படங்களை பதிவிடும்போது கவனமாக செயற்பாடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ வலியுறுத்தியுள்ளார்.
நவகமுவ பகுதியிலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவர் மற்றும் இரு பெண்கள் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்படும் சம்பவம் காணொலியாக எடுக்கப்பட்டு சமூகவலைத்தளம் மூலம் பரப்பப்பட்ட நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான துஷ்பிரயோக சம்பவங்கள், தாக்குதல்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவகமுவ விவகாரத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நபர் பாரியதொரு குற்றத்தை செய்துள்ளார். அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், குற்றவியல் சட்டத்தின் 365 டி முதலாவது பிரிவின் அடிப்படையில் இது பாரியதொரு குற்றமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.